முதியவர் கொலை வழக்கில் ஓட்டல் தொழிலாளி கைது; பரபரப்பு வாக்குமூலம்


முதியவர் கொலை வழக்கில் ஓட்டல் தொழிலாளி கைது; பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 July 2019 11:15 PM GMT (Updated: 24 July 2019 7:15 PM GMT)

போரூர் அருகே முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரம் வி.என்.டி. அவென்யூ, குறிஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன் (வயது 78). தனது மனைவி, மகன்களை விட்டு பிரிந்து இந்த வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். கீழ்வீட்டை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டுக்குள் பாஸ்கரன், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த 3 பவுன் நகை, வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த மொபட் திருட்டுபோய் இருந்தது.

எனவே மர்மநபர்கள் முதியவரை கொன்று, நகை மற்றும் மொபட்டை திருடிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர்.

அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. கொலைக்கு முன்னதாக பாஸ்கரனிடம் யாரெல்லாம் பேசினார்கள்? என அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அதில் அதே பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வந்த திருமுல்லைவாயலை சேர்ந்த மன்சூர் அகமது (35) என்பவர்தான் அவருடன் அதிகமாக பேசி இருப்பது தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது முதியவர் பாஸ்கரனை கொலை செய்ததை மன்சூர் அகமது ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:–

மனைவி, மகன்களை பிரிந்து பாஸ்கரன் தனியாக வசித்து வந்ததால் நான் வேலை பார்க்கும் ஓட்டலில் வந்துதான் சாப்பிடுவார். சில நேரங்களில் அவரால் ஓட்டலுக்கு நடந்து வரமுடியவில்லை என்றால் நானே அவரது வீட்டுக்கு சென்று சாப்பாடு கொடுத்துவிட்டு வருவேன். இதனால் எங்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

நான், திருமுல்லைவாயலில் புதிதாக வீடு கட்டியதால் கடன் பிரச்சினையில் சிக்கி தவித்தேன். இதை அறிந்த பாஸ்கரன், எனக்கு வெளியில் இருந்து பணம் வரவேண்டியது உள்ளது. வந்த உடன் உனக்கு தருகிறேன். கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக இரு என்று கூறினார். அவர் அப்படி சொன்னது எனக்கு ஆறுதலாக இருந்தது. அவர் எப்போது பணம் தருவார் என எதிர்பார்த்து இருந்தேன்.

சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி என்னை அவரது வீட்டுக்கு அழைத்தார். நானும் பணம் கிடைக்கும் என்ற சந்தோசத்தில் அங்கு சென்றேன். ஆனால் பாஸ்கரன், என்னை ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைத்தார். அப்படி வந்தால் பணம் தருகிறேன் என வற்புறுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான், கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி வீட்டின் வெளியே சென்று செங்கல்லை எடுத்து வந்து பாஸ்கரன் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டதுபோல் போலீசாரை நம்ப வைக்க அவர் அணிந்து இருந்த 3 பவுன் நகைகள், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த அவரது மொபட் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான மன்சூர் அகமதுவிடம் இருந்து 2 பவுன் நகைகள், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story