வரதட்சணை கேட்ட தகராறு: தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை தொழிலாளி வெறிச்செயல்


வரதட்சணை கேட்ட தகராறு: தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 25 July 2019 4:45 AM IST (Updated: 25 July 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே வரதட்சணை கேட்ட தகராறில் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை தொழிலாளி கொலை செய்தார்.

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி மகன் சுரேஷ் (வயது 32). தொழிலாளி. இவருக்கும் கந்தகுமாரன் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகள் அமலா(24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு அகிலன் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது அமலாவின் பெற்றோர் சுரேசுக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுரேஷ், பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணையாக நகைகள் வாங்கி வரும்படி கூறி அமலாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ் வரதட்சணை கேட்டு அமலாவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது தாய் உக்கிரவள்ளியை செல்போனில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் பற்றி கூறி கதறி அழுதுள்ளார். அப்போது அவர், தனது மகளை சமாதானப்படுத்தி, நாளை (அதாவது நேற்று) காலை வீட்டுக்கு வருவதாக கூறினார்.

இதையடுத்து நேற்று காலை அமலாவின் தாய் உக்கிரவள்ளி, மாளிகைமேட்டில் உள்ள சுரேசின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் அமலா இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அமலாவின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அமலாவின் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே சுரேஷ், தனது மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறி முட்டம் கிராம நிர்வாக அலுவலர் உலகநாதனிடம் சரண் அடைந்தார். பின்னர் அவர், சுரேசை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும் அமலாவுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது பேசியபடி அமலாவின் பெற்றோர் எனக்கு நகை போடவில்லை. இதுபற்றி எனது மனைவியிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தேன். நேற்று இரவும் (அதாவது நேற்று முன்தினம்) எனது மனைவியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கூறினேன். அதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பின்னர் நான் தகராறில் ஈடுபட்டது குறித்து அமலா, அவரது தாய் மற்றும் சகோதரியிடம் செல்போனில் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டம் போட்டேன். அதன்படி அமலா தூங்கியதும், அவரது கழுத்தில் கிடந்த தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய தாலி கயிற்றை வீட்டின் அருகில் உள்ள மரத்தில் வைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்து, கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

தாலி கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கி கணவனே கொலை செய்த சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story