அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த மெய்யூர் பஞ்சாயத்திற்கு உள்பட்ட குருபுரம் கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–
நாங்கள் மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருபுரம் கிராமத்தில் காலம் காலமாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதி காடுகள் அடர்ந்த பகுதி ஆகும். எங்கள் பகுதியில் ஆஸ்பத்திரி, அங்கன்வாடி, சிறுவர்கள் படிப்பதற்கு பள்ளி, பொதுக்கழிப்பிடம், விளையாட்டு மைதானம், சிமெண்டு சாலை, குடிநீர் வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் அதிகாரிகள் செய்து தரவில்லை. இதனால் நாங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலும் காலம்காலமாக பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம்.
எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் எங்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி முறையிட வந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.