திண்டிவனத்தில் விவசாயிகளுக்கு ரூ.19 லட்சம் சொட்டுநீர் பாசன திட்ட கருவிகள் வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் வழங்கினார்


திண்டிவனத்தில் விவசாயிகளுக்கு ரூ.19 லட்சம் சொட்டுநீர் பாசன திட்ட கருவிகள் வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 24 July 2019 9:45 PM GMT (Updated: 24 July 2019 7:41 PM GMT)

திண்டிவனத்தில் மானிய விலையில் 22 விவசாயிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசனத்திட்ட கருவிகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் வழங்கினார்.

திண்டிவனம்,

திண்டிவனம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பதிவு முகாம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் கென்னடி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் கலந்து கொண்டு 22 விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.19 லட்சம் மதிப்பிலான சொட்டுநீர் பாசனத்திட்ட கருவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் சீரான மழைப்பொழிவு இருக்கிறது. விவசாயிகள் நீர்ப்பாசானங்களில் பழமையான முறைகளை கடைபிடிப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு, களைப்பிரச்சினைகள், சத்துக்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மகசூல் இழப்பு பெருமளவு ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு பாசனத்தில் உள்ள சுமார் 4½ லட்சம் விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திட்டத்தை பயன்படுத்தினால் குறைந்தது 3 முதல் 4 போகம் காய்கறிகள், மணிலா, சிறுதானியங்கள், பயறுவகைப் பயிர்கள், தர்பூசணி, மக்காச்சோளம் போன்றவை சாகுபடி செய்திடவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் அதிகரித்திடவும் கிராம பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நுண்ணீர் பாசனத்திட்டத்திற்கு சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் அரசு வழங்குகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், புகைப்படம், நில வரைப்படம், சிறு,குறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் பகுப்பாய்வு சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள வேளாண்மைதுறை அலுவலகங்களில் பதிவு செய்து பயன் அடைந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்களவாய் பழனி, ஜக்காம்பேட்டை வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பிரேம்குமார், வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் திண்டிவனம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story