உழவர் கடன் அட்டைகள் பெற சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்
உழவர் கடன் அட்டைகள் பெற விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிதித்தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் நோக்கில் வங்கிகள் மூலம் உழவர் கடன் அட்டைகள் (கிசான் கிரெடிட் கார்டுகள்) வழங்கப்படுகின்றன. இந்த அட்டை அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த அட்டைகளை விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்காகவும், கால்நடை வளர்ப்புக்காகவும் கடன் பெற பயன்படுத்திக்கொள்ளலாம். பயிர் சாகுபடியை பொறுத்தமட்டில் பயிர் சாகுபடியின் பரப்பளவிற்கு ஏற்றவாறும், கால்நடை வளர்ப்பை பொறுத்தமட்டில் நடப்பு மூலதனத்தின் அளவிற்கும் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் எந்தவொரு ஈட்டுறுதியும் இல்லாமல் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ. 3 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையின் பயனீட்டு கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இந்த அட்டைகள் மூலம் கடன் பெற்று உரிய தவணை செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீதம் மட்டுமே சலுகை வட்டி தொகையாக வசூலிக்கப்படுகிறது.
எனவே, அனைத்து விவசாயிகளும் இதற்கான விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நில ஆவணங்களுடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story