வளர்ச்சி திட்ட பணிகளை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் வனத்துறை அரசு செயலர் பேச்சு


வளர்ச்சி திட்ட பணிகளை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் வனத்துறை அரசு செயலர் பேச்சு
x
தினத்தந்தி 25 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி திட்ட பணிகளை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வனத்துறை அரசு செயலர் ஷம்பு கல்லோலிகர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு செயலர் ஷம்பு கல்லோலிகர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர் பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை கஜா புயலின் போது மிகச்சிறப்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றியது பாராட்டுக்குரியது. மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்கி சிறப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது.

முதல்-அமைச்சர் குடிநீர் திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற அறிவுறுத்தி உள்ளார். அந்த வகையில் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் தேவைப்படும் இடங்களில் கூடுதல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்கவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும்.

கஜா புயலின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை விரைவாக மீட்டெடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுத்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்துதல் கூடுதல் திட்ட அலுவலர் ராஜகோபால்சுங்கரா, தலைமையில் ஒவ்வொரு வாரமும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பிரதமமந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டமான விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் பட்டா மாறுதல் செய்வதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்மாய், ஏரி, குளங்கள் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி நீர் பிடிப்பு திறனை அதிகரிக்க செய்வதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்காக முதல்-அமைச்சரால் கொண்டுவரப்பட்ட சிறப்பு திட்டமாகிய குடிமராமத்து பணியினை புதுக்கோட்டை மாவட்டத்தில் பாசனதாரர் சங்கங்களின் மூலம் மேற்கொள்ளவும், இப்பணிகள் உரிய முறையில் நடைபெறுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதேபோன்று வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் திட்ட பணிகளை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்துதல் கூடுதல் திட்ட அலுவலர் ராஜகோபால்சுங்கரா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story