158 அரசு பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டிகள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்
158 அரசு பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
நாமக்கல்,
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் பாலியல்வன்கொடுமைகளை தடுக்க தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்-1098 உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 64 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 94 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 158 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்த சுவரொட்டிகள் மாணவ, மாணவிகள் காணும் வண்ணம் பள்ளிகளில் ஒட்டப்பட்டு உள்ளன. இதன் மூலம் மாணவ, மாணவிகளும் விழிப்புணர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியில் கருக்கலைப்பு, சிசுக்கொலை, குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல், குழந்தை பாலியல் கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட வன்முறைகளை தடுக்க அவசர உதவி எண் 1098-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஒட்டப்பட்டு உள்ள விழிப்புணர்வு சுவரொட்டிகளை அனைத்து மாணவ, மாணவிகளும் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story