ஆதனூர் சுயம்பு அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


ஆதனூர் சுயம்பு அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 24 July 2019 10:30 PM GMT (Updated: 24 July 2019 8:31 PM GMT)

ஆதனூர் சுயம்பு அங்காளபரமேஸ்வரி கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா குளித்தலை காவிரி ஆற்றில் புனித நீராடி அன்று இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் நாகனூர், கழுகூர், ஆதனூர், பேரூர், பொம்மாநாயக்கன்பட்டி, மேலவெளியூர், கீழவெளியூர், காக்காயம்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து அங்காளபரமேஸ் வரிக்கு மண்டல அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தனர்.

பாதயாத்திரை

இக்கோவிலின் முதல்நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை குன்னாகவுண்டன்பட்டியில் இருந்து புனித நெல் அழைத்து வருதல், கோவிலில் தண்ணீரில் தீபம் ஏற்றுதல், பொங்கல் வைப்பதற்காக புனித நெற்களை கைகளால் உரிக்க 7 கன்னிப்பெண்களை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் இருந்து அம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டு பேச்சியம்மன், வீரபத்திரசுவாமி, மதுரைவீரன், மாயழகு பெரியகருப்பண்ணசுவாமி, பட்டாயி ஆகிய சாமிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து சென்று, இரவு ஆதனூர் எல்லையில் இருந்த முத்துப்பல்லாக்கில் அங்காளபரமேஸ்வரியின் திருக்கரகம் வைக்கப்பட்டு வீதிஉலாவாக கொண்டு செல்லப்பட்டு கோவிலை அடைந்தது.

எரிகாவல் காடேறும் பூஜை

தொடர்ந்து நேற்று நாகனூரில் இருந்து சூலாடு அழைத்து வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு, மொட்டை எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு எரிகாவல் காடேறும் பூஜை நடைபெற்றது. இதில் நாகனூர், கழுகூர், ஆதனூர், பேரூர், பொம்மாநாயக்கன்பட்டி, மேலவெளியூர், கீழவெளியூர், காக்காயம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள கோவில் குடிபாட்டுக்காரர்கள் (பங்காளிகள்) மற்றும் திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று ( வியாழக் கிழமை) அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கிடாவெட்டுதல், மதுரை வீரன் சுவாமிக்கு முப்பெரும் பூஜைகள் ஆகியவை நடைபெற உள்ளது. 

Next Story