வேகன்களில் குடிநீர் நிரப்பும் நேரத்தை குறைக்க நடவடிக்கை மேலாண்மை இணை இயக்குனர் நேரில் ஆய்வு
வேகன்களில் குடிநீர் நிரப்பும் நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர் நிர்மல்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு நாள்தோறும் 1 கோடி லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டது. அதன் தொடர்ச்சியாக நாளொன்றுக்கு நேற்று முன்தினம் முதல் 50 லட்சம் லிட்டர் குடிநீர் 2 ரெயில்கள் மூலம் 100 வேகன்களில் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குனர் நிர்மல்ராஜ் துறை அதிகாரிகளுடன் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் யார்டு மற்றும் மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஆகிய இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ரெயில் மூலம் வேகன்களில் குடிநீர் நிரப்பும் முறை, குடிநீர் தரம் பார்க்கும் முறை என அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். தொடர்ந்து யார்டில் ரெயில் மூலம் குடிநீர் ஏற்றும் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நிர்மல்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12-ந் தேதி முதல் ரெயில் மூலம் சென்னைக்கு நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் முதல் 2 ரெயில்களில் 100 வேகன்களில் 50 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தற்போது 50 வேகன்களில் குடிநீர் நிரப்புவதற்கு 3 மணி நேரம் ஆகிறது. எனவே இந்த நேரத்தை குறைத்து 3 மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் நிரப்ப நேரத்தை குறைக்க முடியுமா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுசக்கரகுப்பத்தில் இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரெயில்வே வேகன்களுக்கு குடிநீர் நிரப்பும் இடம் 3½ கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 11 வளைவுகள் இருப்பதால் நீரின் வேகம் குறைவதால் வேகன்களில் நீர் நிரப்பும் நேரம் 3 மணி நேரம் ஆகிவிடுகிறது. அந்த வளைவுகளை 6 வளைவுகளாக குறைத்தால் நீரின் வேகம் அதிகரிக்கும். வேகன்களில் வேகமாக தண்ணீர் நிரப்ப முடியும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சென்னைக்கு தினசரி தண்ணீர் எடுத்து செல்லும் வேகன் ரெயிலின் பயணநேரம் 5 மணி முதல் 5½ மணி நேரம் ஆகிறது. அதனை 4 மணி நேரத்தில் சென்னைக்கு எடுத்து செல்ல நேரத்தை குறைக்க ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் அழகர்சாமி, மேற்பார்வை பொறியாளர் சுந்தரலிங்கம், நிர்வாக பொறியாளர்கள் சுப்பிரமணியம், ராஜீவ் மற்றும் கோவை அன்பு உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story