பாம்பன் ரெயில் பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி
பாம்பன் ரெயில் பாலத்தில் புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. கடலுக்குள் 146 தூண்கள் கட்டப்பட்டு அதன் மீது 145 கர்டர்கள் அமைக்கப்பட்டும், கர்டர்கள் மீது தண்டவாளங்கள் அமைக்கப்பட்டும் அதன் மீது ரெயில்கள் சென்று வருகின்றன.
கடலுக்குள் அமைந்துள்ளதோடு, 105 ஆண்டுகளை கடந்துள்ள பாலத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து ரெயில்களும் 20 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பாம்பன் ரெயில் பாலத்தில் 27 இரும்பு கர்டர்கள் புதிதாக அமைக்க ரெயில்வே துறைக்கு மத்திய அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை 19 இரும்பு கர்டர்கள் ரெயில் பாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் மீதமுள்ள புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. அதற்காக தூக்கு பாலத்திற்கும், ரெயில் பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிரேன் மூலமாக பழைய கர்டரானது முதலாவதாக அகற்றப்பட்டது. அதன்பின்பு பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து புதிய இரும்பு கர்டர் டிராலியில் வைத்து கொண்டு வரப்பட்டது.
அதை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து பாதுகாப்பாக ரெயில் பாலம் வழியாக இழுத்து கர்டர் மாற்றும் இடத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து பழைய கர்டர் அகற்றப்பட்ட இடத்தில் புதிய கர்டர் பொருத்தப்பட்டது.
ரெயில் பாலத்தில் புதிய கர்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருவதால் தினசரி காலை 6.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு ராமேசுவரம் வரும் பாசஞ்சர் ரெயில் 3-வது நாளாக நேற்றும் மண்டபத்தோடு நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் அங்கிருந்தே மதுரைக்கு புறப்பட்டு சென்றது. 30-ந்தேதி வரை மதுரை பாசஞ்சர் ரெயில் மண்டபம் வரை மட்டும் இயக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் ரெயில் பாலத்தில் ரூ.8 கோடி நிதியில் 27 இரும்பு கர்டர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 புதிய கர்டர்கள் பொருத்தும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது மேலும் 4 கர்டர்கள் மாற்றும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பணி வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story