பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்த முதியவர் மீனவர்கள் மீட்டனர்


பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்த முதியவர் மீனவர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 25 July 2019 4:15 AM IST (Updated: 25 July 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சியாக கடலில் குதித்த முதியவரை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

ராமேசுவரம், 

பாம்பன் ரோடு பாலத்திற்கு நேற்று காலை 9 மணி அளவில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வந்தார். திடீரென்று அந்த முதியவர் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது ஏறி உடனடியாக கடலில் குதித்தார்.

பின்னர் கடலில் தத்தளித்த முதியவரை ரெயில் பாலத்தில் நின்று வலைவீசி மீன்பிடித்து கொண்டிருந்த மண்டபத்தை சேர்ந்து மீனவர்கள் சுரேஷ், குமார் ஆகிய 2 பேரும் கண்டனர். உடனடியாக அவர்கள் 2 பேரும் கடலில் நீந்தி சென்று அந்த முதியவரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவத்தனர். அதன்பேரில் வந்த மண்டபம் கடலோர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார், மீனவர்களால் காப்பாற்றப்பட்ட முதியவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த முதியவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சந்திரமோகன்(வயது 65). அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தனது மனைவி, பிள்ளைகளுடன் வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அவரது மனைவி இறந்துவிட்டார். இதனால் தன்னை கவனிக்கவோ, உதவி செய்யவோ உறவினர்கள் யாரும் முன்வராததால் தற்கொலை செய்வதற்காக பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் குதித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சந்திரமோகனை போலீசார் ராமேசுவரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இந்த முதியவரை பற்றி தெரிந்தவர்கள் மண்டபம் கடலோர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story