மீன்வளத்துறை சார்பில் நாட்டுப்படகுகள் கணக்கெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் நாட்டுப்படகுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
ராமநாதபுரம்,
ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறையின் சார்பில் விசைப்படகுகள் கணக்கெடுப்பதுபோல நாட்டுப்படகுகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக சென்னை முதல் ராமநாதபுரம் வரையிலான கடலோர பகுதிகளில் நாட்டுப்படகுகள் குறித்த கணக்கெடுக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 43 உதவி இயக்குனர்கள் தலைமையில் மீன் துறை இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஓவர்சீயர் உள்ளிட்டோர் அடங்கிய 250 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 45,000 நாட்டுப்படகுகளில் தற்போது எத்தனை படகுகள் உள்ளன? எத்தனை படகுகள் அழிக்கப்பட்டுள்ளன? புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நாட்டுப்படகுகள் எத்தனை? பதிவெண், உரிமம், உரிமையாளர் விவரம், என்ஜின் பதிவு எண், உயிர்காக்கும் கவசங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் வேறு மாவட்டங்களை சேர்்ந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் தலைமையில் மொத்தம் 4,361 நாட்டுப்படகுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு படகு உரிமையாளரின் புகைப்படம் எடுக்கப்பட்டு பதிவெண்களுடன் மீன்வளத்துறையின் படகு சரிபார்ப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த விவரங்கள் சென்னையில் உள்ள மீன்வளத்துறை ஆணையாளரின் தொகுப்பிற்கு அனுப்பப்பட்டது. இந்த பட்டியலின்படி மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், டீசல் மானியம் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும்.
இவ்வாறு நாகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 5,800 படகுகள் இருப்பது கண்டறியப்பட்டது. புதிதாக 117 படகுகள் உருவாகி கணக்கெடுப்பில் கூடுதலாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக தூத்துக்குடி முதல் குளச்சல் வரையிலான கடலோர பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) நாட்டுப்படகுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது என்று ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story