டாக்டர் வீட்டில் ரூ.62 லட்சம் நகை, பொருட்கள் கொள்ளை: வேலைக்காரர் உள்பட 2 பேர் கைது
ஜோகேஸ்வரியில் டாக்டர் வீட்டில் ரூ.62 லட்சம் நகை பொருட்களை கொள்ளையடித்த வேலைக்காரர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை ஜோகேஸ்வரி மேற்கு பகுதியை சேர்ந்தவர் சுக்வீந்தர் சிங். டாக்டர். இவரது வீட்டில் சஞ்சீவ் (வயது24) என்ற வாலிபர் வீட்டு வேலைகள் செய்து வந்தார்.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டாக்டர் சுக்வீந்தர் சிங் குடும்பத்துடன் பாங்காங்சென்று இருந்தார். வீட்டில் சஞ்சீவ் மட்டும் இருந்தார்.
இந்த நிலையில், மும்பை திரும்பிய சுக்வீந்தர் சிங், வீட்டிற்கு சென்ற போது, வேலைக்காரர் சஞ்சீவ் மாயமாகி இருந்தார். மேலும் வீட்டில் இருந்த நகைகள், விலையுயர்ந்த கைக்கெடிகாரங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொள்ளை போயிருந்தன.
அவற்றை சஞ்சீவ் தான் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என அவர் நினைத்தார். இதுபற்றி அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், சஞ்சீவ் திருட்டு பொருட்களுடன் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் தப்பி சென்றதும், பின்னர் அங்கிருந்து சண்டிகருக்கு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சண்டிகர் சென்று சஞ்சீவை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், டாக்டர் வீட்டில் திருடிய நகை, கைக்கெடிகாரங்கள் மற்றும் வாசனை திரவியங்களை தனது நண்பர் அனில் ராமச்சந்திராவுடன் பங்கிட்டு கொண்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் மொகாலியில் தலைமறைவாக இருந்த அனில் ராமச்சந்திராவையும் கைது செய்தனர்.
டாக்டர் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு அவர் வீடியோ கால் மூலம் சஞ்சீவுக்கு யோசனை கொடுத்து கொள்ளையை அரங்கேற்றி இருந்தது தெரியவந்தது.
கைதான இருவரிடமும் இருந்த தங்க, வைர நகைகள், 16 கைக்கெடிகாரங்கள், வாசனை திரவியங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் இருவரையும் மும்பை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story