சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்-மந்திரி பட்னாவிஸ் ‘மகா ஜனாதேஷ்’ யாத்திரை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒரு மாத காலம் மகா ஜனாதேஷ் யாத்திரையை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறார்.
மும்பை,
மராட்டிய சட்டமன்ற தேர்தல் வருகிற அக்டோபரில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மக்களிடம் நெருங்கி செல்கிறார்கள். குறிப்பாக யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே மக்களை சந்திக்கும் வகையில் கடந்த 21-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய யாத்திரையை தொடங்கினார்.
இந்த நிலையில் கூட்டணி கட்சியான பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் மாநிலம் தழுவிய யாத்திரையை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறார்.
இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வருகிற (ஆகஸ்டு) 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஒரு மாத காலம் மாநிலம் தழுவிய ‘மகா ஜனாதேஷ்’ யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 4 ஆயிரத்து 384 கி.மீ. தூர சுற்றுப்பயணம் செய்கிறார். இதில் மரத்வாடா, விதர்பா மண்டலங்களில் மட்டும் 1,000 கி.மீ. யாத்திரை செல்ல இருக்கிறார். இந்த யாத்திரையின் போது 87 பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெறும். 57 வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அமராவதி மாவட்டத்தில் தனது யாத்திரையை முதல்-மந்திரி தொடங்குகிறார். தொடக்க விழாவில் அனைத்து மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைப்பது பற்றி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதால், அவர் கலந்து கொள்ள முடியுமா? என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story