மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - கலெக்டர் ராமன் தகவல்


மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 25 July 2019 5:00 AM IST (Updated: 25 July 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கலெக்டர் ராமன் கூறினார்.

சேலம்,

முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மூலம் சரபங்கா வடிநில கோட்டம், மேட்டூர் அணைக்கோட்டம் ஆகியவை சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கும், அரசு நிதி மூலம் குடிமராமத்து பணிகளை செய்து வரும் ஏரி, பாசனதாரர் சங்க உறுப்பினர்களுக்கான திட்ட செயலாக்க பயிற்சி மற்றும் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏரி, குளங்களை தூர்வாரி நீர் சேமிக்கும் வகையிலும், மேட்டூர் அணையில் விவசாயிகள் வண்டல் மண் இலவசமாக எடுத்து விளை நிலங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் வகையிலும் குடிமராமத்து திட்டம் மற்றும் இலவச வண்டல் மண் வழங்கும் திட்டத்திற்கு சேலம் மாவட்டத்திற்கு ரூ.5 கோடியே 63 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.

சரபங்கா வடிநிலக்கோட்டத்திற்குட்பட்ட 9 ஏரிகள், 4 அணைக்கட்டுகள், ஆனைமடுவு, கரியகோவில் அணை பகுதிகளில் அணுகு சாலை புனரமைத்தல் மற்றும் மேட்டூர் அணை கோட்டம் சார்பில் சங்ககிரி, மேட்டூர் கிழக்கு கரை கால்வாயின் கிளை வாய்க்கால் புனரமைத்தல் என மொத்தம் 20 பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழைக்காலம் தொடங்க உள்ள காரணத்தினால் தற்போது குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரி கரைகளை செம்மை படுத்தி நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மழை நீரை சேமிக்க முடியும். குடிநீர் தேவையை நிறைவேற்றவும் முடியும். எனவே குடிமராமத்து பணிகளை மேற்கொண்டுவரும் விவசாயிகள், ஏரி, பாசனதாரர் சங்க உறுப்பினர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர், திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், மேட்டூர் அணை கோட்ட செயற்பொறியாளர் தேவராஜன், ஊராட்சி உதவி இயக்குனர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story