மைசூருவில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வர்தந்தி உற்சவம்
மைசூருவில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வர்தந்தி உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி தங்க பல்லக்கு ஊர்வலத்தை இளவரசர் யதுவீர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
மைசூரு,
மைசூரு அருகே சாமுண்டிமலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கன்னட ஆடி மாதமான (ஆஷாட) ரேவதி நட்சத்திரத்தன்று சாமுண்டீஸ்வரி அம்மன் பிறந்ததாக நம்பப்படுகிறது. அதனால் அன்றைய தினம் வர்தந்தி உற்சவமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வர்தந்தி உற்சவம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக தங்க பல்லக்கில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தார். முன்னதாக தங்க பல்லக்கில் எழுந்தருளி அம்மனுக்கு சம்பிரதாய முறைப்படி மைசூரு இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி ஆகியோர் முதல் பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் தங்க பல்லக்கு ஊர்வலத்தை அவர்கள் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
வர்தந்தி உற்சவத்தையொட்டி பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா, முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி கோவில் தஷோகா பவனத்தில் அன்னதானம் நடந்தது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதமும் வினியோகிக்கப்பட்டது.
அத்துடன் விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சாமுண்டிமலை அடிவாரத்தில் உள்ள ஹெலிபேடு மைதானத்தில் இருந்து சாமுண்டி மலைக்கு இலவசமாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதே வேளையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
சாமுண்டீஸ்வரி அம்மன் வர்தந்தி உற்சவத்தையொட்டி மைசூருவில் பல்வேறு இடங்களில் அம்மனின் புகைப்படத்தை வைத்து மக்கள் பூஜை செய்தனர். பின்னர் தயிர் சாதம், சாம்பார் சாதம், கேசரி, பொங்கல் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினர். நாளை கன்னட ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. அன்றும் இதுபோல் மைசூரு நகர மக்கள் பல்வேறு இடங்களில் அம்மன் புகைப்படத்தை அலங்கரித்துவைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story