வேலூர் ஜெயிலில் இருந்து நளினி பரோலில் வந்தார் தாய், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு


வேலூர் ஜெயிலில் இருந்து நளினி பரோலில் வந்தார் தாய், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 25 July 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து மகளின் திருமண ஏற்பாட்டிற்காக 28 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு மாத கால பரோலில் நளினி வெளியே வந்தார். அவரை தாயார் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுகாலம் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முருகன்-நளினி தம்பதியினரின் ஒரே மகள் ஹரித்ரா. 27 வயது நிரம்பிய அவர் லண்டனில் எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். ஹரித்ராவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்கு 6 மாதம் பரோல் வழங்கும்படி நளினி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதுதொடர்பாக அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 5-ந் தேதி நளினி பலத்த போலீஸ் காவலுடன் வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் வாதாடிய நளினி, என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமனாரை பராமரிக்கவும் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நளினியின் வாதம் மற்றும் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பாதுகாப்பு கருதி நளினிக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கியது. மேலும் நளினி தங்கும் வீட்டின் ஆவணம், ஜாமீன் உத்தரவாதம் ஆகியவை குறித்து 10 நாட்களுக்குள் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்யவும், அதுதொடர்பாக பரிசீலனை செய்து நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டில் ஒரு மாதம் தங்க உள்ளதாக நளினி தெரிவித்தார். நளினியின் தாயார் பத்மாவதி மற்றும் உறவினர் சத்யா 2 பேரும் ஜாமீன் உத்தரவாதத்துக்கான ஆவணங்களை அளித்தனர். இதையடுத்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகளும், மாவட்ட போலீசாரும் நளினி தங்க உள்ள வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தனர். நளினி தங்கும் வீடு குறித்த ஆவணங்களும் கடந்த 13-ந் தேதி சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் நளினி பரோலில் வருவது காலதாமதமானது.

இந்த நிலையில் நேற்று காலை நளினி பரோலில் வருவதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை தரப்பில் நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி பெண்கள் ஜெயிலில் வளாகம் மற்றும் நுழைவுவாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலை 10 மணியளவில் பெண்கள் ஜெயிலில் இருந்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் நளினி ஒரு மாத கால பரோலில் வெளியே வந்தார். ஆரஞ்சு நிற பட்டுப்புடவை உடுத்தி புன்னகைத்தப்படி வந்த நளினியை அவரது வக்கீல் புகழேந்தி வரவேற்றார். தொடர்ந்து நளினியை, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் 15 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு வந்த நளினியை அவருடைய தாயார் பத்மாவதி ஆரத்தி எடுத்து வரவேற்றார். அவருடைய உறவினர்களும் கண்ணீர் மல்க நளினியை வரவேற்றனர்.

நளினியுடன் அவரது தாயார் பத்மாவதி, சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் தங்குவதாகவும், நளினி தங்கும் வீட்டின் முன்பு மற்றும் அப்பகுதியில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 5 பெண் போலீசார் உள்பட 12 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story