பழைய குழம்புடன் உணவு கொடுத்ததால் தகராறு தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை பாட்டியும் தூக்கில் தொங்கிய பரிதாபம்


பழைய குழம்புடன் உணவு கொடுத்ததால் தகராறு தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை பாட்டியும் தூக்கில் தொங்கிய பரிதாபம்
x
தினத்தந்தி 26 July 2019 4:15 AM IST (Updated: 26 July 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே பழைய குழம்புடன் சாப்பாடு கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், பாட்டியும் தூக்குப்போட்டுக்கொண்டார்.

வந்தவாசி, 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிருஷ்ணாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 30). இவருடைய மனைவி சசிரேகா(25). பிரகாஷின் பாட்டி கவுரியம்மாள்(65). இவர் பிரகாஷ் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த 23-ந்தேதி இரவு சசிரேகா மதியம் வைத்த குழம்புடன் பாட்டி கவுரியம்மாளுக்கு உணவு கொடுத்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சசிரேகாவை, கவுரியம்மாள் தாக்கி உள்ளார்.

இதுபற்றி சசிரேகா, இரவு வீட்டுக்கு வந்த கணவர் பிரகாஷிடம் கூறினார். அப்போது அவர் எப்போதும் இருவரும் இப்படி சண்டை போட்டுக்கொண்டிருந்தால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்று கூறிய அவர், நான் இறந்துவிட்டால் இருவரும் நிம்மதியாக இருப்பீர்கள் என கூறி விட்டு அறைக்குள் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து சசிரேகா அந்த அறைக்குள் சென்றார். அப்போது பிரகாஷ் தூக்கில் தொங்குவதை கண்டு கூச்சலிட்டார். இதை தொடர்ந்து உறவினர்கள் பிரகாசை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரகாஷ் இறந்து விட்டதாக கூறினர்.

இந்த நிலையில் பிரகாஷ் இறந்து விட்ட தகவல் அறிந்த கவுரியம்மாள் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி பள்ளியின் பின்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வடவணக்கம்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கவுரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story