அரிசி ஆலை அதிபரிடம் ரூ.28 லட்சம் மோசடி வியாபாரி கைது
அரிசி ஆலை அதிபரிடம் ரூ.28 லட்சத்துக்கு அரிசி வாங்கிவிட்டு பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மனைவி உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் ரோட்டில் உள்ள தென்மாத்தூரை அடுத்த சு.கீழ்நாச்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 63). அரிசி ஆலை அதிபர். இவரிடம் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் அரிசி வாங்கி வியாபாரம் செய்து வந்து உள்ளார். சேகருக்கு சேலம் சூரமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த வியாபாரி சந்திரன் மற்றும் அவரது மனைவி முருகேஸ்வரியை மனோகரன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். சந்திரனுக்கு ஈரோடு மாவட்டம் திண்டல் சொந்த ஊராகும்.
சந்திரனும் அவரது மனைவி மகேஸ்வரியும் சேகரிடம், அரிசி ஆலையிலிருந்து அரிசி கொடுத்தால் அதனை மார்க்கெட் விலைக்கு வாங்கிக்கொண்டு அதற்கான தொகையை 30 முதல் 45 நாட்களுக்குள் சரியாக திருப்பி செலுத்தி விடுவோம் என்று கூறியுள்ளார்.
மனோகரனின் மீது இருந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த 2019 ஜனவரி மாதம் வரை சந்திரனுக்கு லாரிகள் மூலம் அரிசி மூட்டைகளை சேகர் அனுப்பியுள்ளார். அந்த வகையில் சந்திரன் ரூ.28 லட்சத்து 20 ஆயிரத்து 920-க்கு அரிசி மூட்டைகளை வாங்கியிருந்தார்.
ஆனால் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் சந்திரன் காலதாமதம் செய்து வந்து உள்ளார். சேகர் தொடர்ந்து சந்திரனிடம் பணம் கேட்டு வந்து உள்ளார். பின்னர் சந்திரன் கடந்த ஜனவரி மாதம் 5 காசோலைகளை கொடுத்து உள்ளார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, பணம் இன்றி திரும்பிவிட்டது.
இது குறித்து சந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது காசோலைகளை கொடுத்து விடுங்கள். அதற்கு பதில் பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதன்பின்னரும் பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக மனோகரனிடமும் சேகர் தெரிவித்து கேட்டுள்ளார். மனோகரனும் தனக்கு தெரியாது என கூறிவிட்டதாக தெரிகிறது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேகர் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரூ.28 லட்சத்து 20 ஆயிரத்து 920-க்கும் அரிசி மூட்டைகள் வாங்கி பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரன், அவரது மனைவி முருகேஸ்வரி மற்றும் மனோகரன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர். முருகேஸ்வரியையும், மனோகரனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story