தற்காலிக மாவட்ட அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை தனி அதிகாரி ஆய்வு
கள்ளக்குறிச்சியில் தற்காலிக மாவட்ட அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை தனி அதிகாரி கிரண் குராலா ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக கடந்த ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு தனி அதிகாரியாக கிரண் குராலா என்பவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இந்த நிலையில் தனிஅதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட கிரண் குராலா நேற்று கள்ளக்குறிச்சி வந்தார்.
பின்னர் அவர் அங்குள்ள பயணியர் மாளிகைக்கு சென்றார். அப்போது அவரை சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் தயாளன், தனி தாசில்தார் சையத்காதர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சத்யபிரியா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து, தற்காலிக மாவட்ட அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள அலுவலகம், குடோன், நவீன அரிசி ஆலைக்கு சொந்தமான கட்டிடம், உலகங்காத்தான் ஆற்காடு நூல் ஆலை, தச்சூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன், நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கம், புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை வளாகம், பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக மாவட்ட அலுவலகம் அமைக்க போதுமான இட வசதி, அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தற்காலிக மாவட்ட அலுவலகம் அமைக்க எந்த இடம் போதுமானதாக இருக்கும் என பார்வையிட்டு வருகிறோம். தற்போது முக்கிய இடங்களை ஆய்வு செய்துள்ளோம். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, இடம் தேர்வு செய்யப்படும். மேலும் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story