மதகு கட்டுவது, கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்: குடிமராமத்து பணிகள் 30 சதவீதம் நிறைவு அதிகாரிகள் தகவல்


மதகு கட்டுவது, கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்: குடிமராமத்து பணிகள் 30 சதவீதம் நிறைவு அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 25 July 2019 11:00 PM GMT (Updated: 25 July 2019 7:16 PM GMT)

மதகுகட்டுவது, கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குடிமராமத்து பணிகள் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளன என அதிகாரிகள் கூறினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால்கள் சீரமைப்பு, தூர்வாரும் பணி, கரைகள் பலப்படுத்துவது, மதகு கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் 117 பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் தஞ்சை, மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட பகுதிகளில் 63 பணிகள் ரூ.7 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. வெண்ணாறு வடிநிலக்கோட்டத்தில் 15 பணிகள் ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், கல்லணைக்கால்வாய் கோட்டத்தில் 24 பணிகள் ரூ.7 கோடியே 77 லட்சம் மதிப்பிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநிலக்கோட்டம் பகுதியில் 11 பணிகள் ரூ.2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும், திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்டம் பகுதியில் 4 பணிகள் 31 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலும் நடைபெற்று வருகின்றன.

கல்லணைக்கால்வாய் கோட்ட பகுதியில் தஞ்சையை அடுத்த ராராமுத்திரக்கோட்டை கிராமத்தில் செண்பகபுரம் கிளை வாய்க்காலின் வலது கரை 6.593 கி.மீ தூரம் ரூ.25 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வாய்க்கால் மூலம் 450 எக்டேர் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் 4 பாசன மதகுகள் மறுகட்டுமானம் செய்தல், படுக்கை அணை மறுகட்டுமானம் செய்தல், பாசன வாய்க்காலை தூர்வாருதல், வாய்க்காலின் கரையை பலப்படுத்துதல் போன்ற பணிகள் பாசனதாரர்கள் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் கடந்த 1 மாதமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 15 நாட்களில் பணிகள் நிறைவடையும் என கூறப்படுகிறது.

இதே போல் வாளமரக்கோட்டை கிராமத்தில் கைலாபுரி ஏரி புனரமைக்கும் பணி ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இந்த ஏரியில் உள்ள 2 மதகுகள் மூலம் 92.82 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த நிதி மூலம் 2 மதகுகள் மறு கட்டுமானம் செய்வது, 1,600 மீட்டர் தூரம் கரைகளை பலப்படுத்துவது, கலிங்கல் மறு சீரமைப்பு போன்ற பணிகள் பாசனதாரர்கள் சங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவிரி வடிநிலக்கோட்டத்தின் கீழ் தஞ்சையை அடுத்த வெள்ளாம்பெரம்பூர், நாகத்தி கிராமங்களில் கோரை வடிகால் 4 ஆயிரம் மீட்டர் தூரம் வரையும், ஆலங்குடி வாய்க்கால் 1,400 மீட்டர் தூரம் வரையும், ஆங்குடி வடிகால் 3 ஆயிரம் மீட்டர் தூரம் வரையும், கரூர் ராஜேந்திரன் வாய்க்கால் 3,200 மீட்டர் தூரம் வரையும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கரூர் ராஜேந்திரன் வாய்க்கால் தூர்வாரும் பணி 50 சதவீதம் நிறைவடைந்து விட்டது. மற்ற பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த பணிகள் குறித்து காவிரி வடிநில வட்ட உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி பொறியாளர் சிவக்குமார், கல்லணைக்கால்வாய் கோட்ட உதவி பொறியாளர்கள் இளங்கண்ணன், சேந்தன் ஆகியோர் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 117 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சராசரியாக 30 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் தொடங்கி 1 மாதம் ஆகின்றன. இந்த பணிகள் அனைத்தும் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்கும் வகையில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

Next Story