தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பூட்டி ‘சீல்’ வைப்பு


தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பூட்டி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 26 July 2019 3:45 AM IST (Updated: 26 July 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

அதிகளவு தண்ணீரை உறிஞ்சியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

-விழுப்புரம், 

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் அளவுக்கு அதிகமான தண்ணீர் உறிஞ்சப்பட்டு விழுப்புரம் மட்டுமின்றி கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இவ்வாறு அதிகளவு தண்ணீரை உறிஞ்சுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினர்.

இந்த புகார் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் கடந்த மாதம் விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையிலான அதிகாரிகள் அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது என்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் விழுப்புரம் நகராட்சி அலுவலகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அலுவலகங்களில் முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்து அதிகமாக தண்ணீர் உறிஞ்சி வணிக மேம்பாட்டிற்கு பயன்படுத்தி வந்ததும், தண்ணீர் எடுக்கும் அளவை குறிப்பிடும் வகையிலான மீட்டர் பொருத்தாததும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று கோட்டாட்சியர் குமாரவேல் தலைமையில், தாசில்தார் (பொறுப்பு) செல்வராஜ், மண்டல துணை தாசில்தார் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் சாதிக் ஆகியோர் சென்று அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

Next Story