தஞ்சையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


தஞ்சையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 25 July 2019 10:30 PM GMT (Updated: 25 July 2019 7:23 PM GMT)

தஞ்சையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் தஞ்சை மருதுபாண்டியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசர் மேல்நிலைப்பள்ளி என 12 கல்லூரிகள் மற்றும் 5 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

துண்டுபிரசுரம்

ஊர்வலம் ரெயிலடியில் தொடங்கி ஆற்று பாலம், பழையபஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வளாகம் அரசர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர். மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்தனர். ஊர்வலத்தின் முடிவில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்பு உரிமைகள், பொருட்களை தேர்ந்தெடுக்கும் உரிமை, கருத்துகள் மற்றும் குறைகளை முறையிடும் உரிமை ஆகியவை குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் விளக்கி கூறினார். ஊர்வலத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாரதி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி, வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story