அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 July 2019 11:00 PM GMT (Updated: 25 July 2019 7:57 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்தார்.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்ககளின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசுகையில், அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் மன்னியார் வாழ்க்கை இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கதவணை திட்டத்திற்காக ஆய்வுகள் விரைவாக செய்ய ரூ.23 லட்சம் ஒதுக்கீடு செய்து சட்டசபையில் அறிவித்த முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சருக்கும், அந்த திட்டத்திற்கு அழுத்தம் கொடுத்த அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரனுக்கும் விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இத்திட்டத்தை ஆய்வு செய்து கதவணை அமைத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே தமிழக அரசு ஆய்வு செய்து இத்திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் விவசாயிகள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் அரசே மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும். சுக்கிரன் ஏரி, தூத்தூர் பெரிய ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேன்டும், என்றார்.

காப்பீடு தொகை

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் பேசுகையில், மழைக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். செந்துறையில் முந்திரி ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்திரியை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். நெல், உளுந்து, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது, என்றார்.

தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க தலைவர் அம்பேத்கர்வழியன் பேசுகையில், தட்டுப்பாடின்றி இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். திருமானூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்க வேண்டும், என்றார். அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசுகையில், பள்ளி நேரத்தில் சாலையில் கனரக வாகனங்கள் செல்வதை தடை விதிக்க வேண்டும். கூட்டுறவு துறை மூலம் வழங்கும் பயிர்க்கடனை விரைந்து வழங்கினால் மட்டுமே விவசாயிகள் பயன்பெற முடியும். கடந்த 10 ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், என்றார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

விவசாயி செந்தில்குமார் பேசுகையில், தேளூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குட்டையில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் குறிப்பிட்ட ரக மரங்களை தனி நபர் ஆக்கரமித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் வினய், அரியலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் வருகிற புதன்கிழமைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று எச்சரித்தார்.

ஆண்டிமடம் ஜெயச்சந்திரன் பேசுகையில், ஆண்டிமடம் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டாலும் அதற்குண்டான கட்டமைப்புகள் இதுவரை ஏற்படுத்தி தரவில்லை. கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கணினி எடை எந்திரத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கூவாத்தூர் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.

கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story