திருச்சி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நவீன பரிசோதனை கூடம்


திருச்சி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான நவீன பரிசோதனை கூடம்
x
தினத்தந்தி 25 July 2019 11:00 PM GMT (Updated: 25 July 2019 8:08 PM GMT)

திருச்சி அரசு மருத்துவ மனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.1 கோடியில் அமைக்கப்பட்ட கருவியுடன் கூடிய நவீன பரிசோதனை கூடம் செயல்பாட்டுக்கு வந்தது.

திருச்சி,

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய சிறப்பு மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சி.டி-4 என்ற கருவியின் மூலம் எச்.ஐ.வி. தாக்கம் கண்டறியப்பட்டு அவற்றின் அளவிற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி. தொற்று உள்ள நோயாளிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.டி. மையத்தின் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிப்பதற்காக ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய கருவியுடன் கூடிய பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

திறப்பு விழா

இந்த பரிசோதனை கூட திறப்பு விழா நேற்று நடை பெற்றது. திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி ‘டீன்’ எஸ். சாரதா நவீன பரிசோதனை கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ‘டீன்’ சாரதா நிருபர்களிடம் கூறும் போது, ‘திருச்சி அரசு மருத்துவமனையின் வரலாற்றில் இது ஒரு மைல் கல். இந்த கருவியின் மூலம், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் நோய் வீரியதன்மையையும், வைரஸ்களின் எண்ணிக்கையையும் மிக துல்லியமாக கண்டு பிடித்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை முறையை மாற்றி அமைக்கலாம். இந்த கருவியின் மூலம் திருச்சி மாவட்டம் மட்டும் இன்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் பயன் அடைய முடியும்’ என்றார்.

குணமாக்க முடியும்

நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் எஸ்.தனபால் கூறும்போது, ‘இந்த நவீன கருவியின் மூலம் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள எச்.ஐ.வி. கிருமிகளின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை இந்த கருவி துல்லியமாக கண்டு பிடித்து சொல்வதால் நோயின் மூலத்தை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் நோயாளிக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்க முடியும். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டால் இறப்பு தான் இறுதி முடிவு என்ற தவறான கருத்து மாறி வருகிறது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நிலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நோய் குணமாவதோடு அவர்களும் சமுதாயத்தோடு ஒன்றி வாழும் வகையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது’ என்றார்.

அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாவட்ட திட்ட மேலாளர் மணிவண்ணன் உள்பட அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Next Story