ஆத்தூர், நல்லூர் குளங்களை தூர்வார வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


ஆத்தூர், நல்லூர் குளங்களை தூர்வார வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 26 July 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர், நல்லூர் குளங்களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க.வை சேர்ந்த மகராஜன் பேசும் போது, விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து குறிப்புகளை வழங்க வேண்டும் என்று 8 மாதமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு அந்த விவரக்குறிப்புகளும் வழங்கப்படவில்லை. ஆகையால் நாங்கள் இந்த கூட்டத்தில் நாற்காலியில் அமரமாட்டோம். நாங்கள் தரையிலேயே அமருகிறோம் என்று கூறி கூட்ட அரங்கில் முன்பக்கத்தில் தரையில் அமர்ந்து இருந்தனர்.

ஆத்தூர் குளம் கஸ்பா அனைத்து விவசாயிகள் அபிவிருத்தி நலச்சங்கத்தினர் ஆத்தூர் குளத்தை தூர்வார வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி கூட்டத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆத்தூர் குளம் மூலம் 2 ஆயிரத்து 220 ஏக்கர் நீர்பாசன வசதி பெறுகிறது. இந்த குளம் பாசனத்தின் மூலம் மூன்று போகம் விவசாயம் நடந்து வந்தது. ஆனால் தற்போது குளம் வறண்டு கிடக்கிறது. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அரசியல் தலையீட்டால் இந்த பணி நிறுத்தப்பட்டு உள்ளது. ஆகையால் போர்க்கால அடிப்படையில் குளத்தை தூர்வாரி விவசாயிகளின் குறைகளை போக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நல்லூர் குளம் மிகவும் பெரிய குளம் ஆகும். இந்த குளம் சுமார் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தூர் குளம் மூலமும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த குளத்தை தூர்வார வேண்டும். குடிமராமத்து திட்டத்தில் குளங்கள் தூர்வாரப்படுகிறது. இதில் குளத்தில் உள்ள மடை பகுதியை விட ஆழமாக குளங்கள் தூர்வாரப்படுகிறது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீரை பாசனத்துக்கு மடைவழியாக கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மோட்டார்கள் மூலம் தண்ணீரை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. குளம் மட்டுமின்றி நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.

நல்லூர் கீழ குளத்தை தூர்வாரி தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குடிமராமத்து திட்டத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் விவசாயிகளுக்கு சரிவர சேவை செய்வது இல்லை. விவசாயிகளை அலைய வைப்பதை தடுக்க வேண்டும். நாசரேத் வகுத்தான்குப்பம் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளை நம்பிதான் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இந்த அணைகளில் இன்னும் 2 மாதத்துக்கு குடிநீருக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலில் 44 ஆயிரத்து 334 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் 40 ஆயிரத்து 573 விவசாயிகளுக்கு ரூ.33 கோடி இழப்பீடு தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் அந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பயிர்காப்பீடு தொகை பெரும்பாலும் வழங்கப்பட்டு உள்ளது.

இதே போன்று விவசாயிகளுக்கு ஓய்வூதியம் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தில் 37 குளங்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் 83 சிறுபாசன குளங்கள், 422 சிறிய ஊருணி, குட்டைகள் தூர்வாரப்பட உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குடிமராமத்து பணியை கண்காணிக்க, அதிகாரிகள் குழு அமைத்து அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம். நல்லூர்குளம் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாருவதற்கு ஏற்கனவே ரூ.66.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் விவசாயிகள் ஒருங்கிணைந்து சங்கம் அமைத்து வர வேண்டும். அவர்கள் இதுவரை சங்கம் அமைக்காததால் அந்த பணி இதுவரை நடைபெறாமல் உள்ளது. ஆத்தூர் குளம் தூர்வாரவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் சங்கம் அமைத்தால் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். இது தொடர்பாக உதவி கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும். தேவைப்பட்டால் சங்கத்துக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொர்ணகுமார், வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜித்சிங் கலோன், விஜயா, தனப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story