நீர்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேச்சு


நீர்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 25 July 2019 10:45 PM GMT (Updated: 25 July 2019 10:41 PM GMT)

நீர்வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று குடிமராமத்துப்பணி பயிலரங்கில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

திருப்பூர், 

தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்துப்பணி முன்னேற்றம் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள், நல சங்கத்தினர், விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுக்கான பயிலரங்கம் திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட பொன்னேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-

விவசாய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2017-2018-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் குடி மராமத்துப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 2019-2020-ம் ஆண்டுக்கு இந்த திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வடிநில கோட்டம், திருமூர்த்தி கோட்டம், பவானி வடிநில கோட்டம் மற்றும் அமராவதி வடிநில கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குடி மராமத்துப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பங்கேற்பு பாசன மேலாண்மையில் விவசாயிகள் தங்களை சிறப்பான முறையில் ஈடுபடுத்தி பங்களிப்பாக மதிப்பீட்டுத்தொகையில் 10 சதவீதம் பணமாகவோ, மனித உழைப்பாகவோ, பொருளாகவோ வழங்க வேண்டும். 90 சதவீதம் அரசின் நிதியாக கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயிலரங்கத்தின் நோக்கம் குடி மராமத்துப்பணிகள் அனைத்து கிராமப்புற விவசாயிகளும் தெரிந்து கொள்வதாகும். அனைத்து பாசன விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி நீர்வளத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் பொதுப்பணித்துறை பொறியாளர் நரேந்திரன், உதவி பொறியாளர்கள் மணிகண்டன், குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story