‘பப்ஜி’ விளையாட்டு மூலம் பழகி காதலியுடன் உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்த வாலிபர் கைது
‘பப்ஜி‘ விளையாட்டு மூலம் இளம்பெண்ணுடன் பழகி, காதலித்து உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ எடுத்த வாலிபர், பணம் கேட்டு தர மறுத்ததால் காதலியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
இன்றைய காலக்கட்டத்தில் ‘பேஸ்புக்‘, ‘இன்ஸ்டாகிராம்‘, டுவிட்டர் உள்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் இளம்பெண்களும், இளைஞர்களும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நண்பர்களாகும் சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலருடைய காதல் முறிந்து போய்விடுகிறது. மேலும் சிலர் காதலிப்பதாக கூறி மோசடி செய்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் செல்போன் ‘டேட்டாவை‘ பயன்படுத்தி விளையாடப்படும் ‘பப்ஜி‘ எனும் விளையாட்டு இன்றைய இளம்வயதினரை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அப்படி ‘பப்ஜி‘ விளையாட்டு மூலம் பழக்கமான இளம்பெண்ணை, வாலிபர் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்து ஏமாற்றிய சம்பவம் பெலகாவியில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
பெலகாவியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் ‘பப்ஜி‘ விளையாட்டு பிரியர் ஆவார். இவர் தினமும் அதிக நேரம் ‘பப்ஜி‘ விளையாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ‘பப்ஜி‘ விளையாட்டு மூலம் அந்த இளம்பெண்ணுக்கும், குஜராத்தை சேர்ந்த மிதுல் சதீஷ் கன்சாரா(வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் தங்களின் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர்.
அதன்பிறகு அவர்கள் 2 பேரும் நண்பர்களாக செல்போனில் பேசி பழகினர். இந்த வேளையில், ‘நான் மும்பையில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன். எனக்கு மாத சம்பளமாக ரூ.3 லட்சம் கிடைக்கிறது‘ என்று மிதுல் சதீஷ் கன்சாரா, இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதை இளம்பெண்ணும் நம்பினார். மேலும் 2 பேரும் காதலிக்க தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக மும்பைக்கு வரும்படி மிதுல் சதீஷ் கன்சாரா, இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட இளம்பெண், பெலகாவியில் இருந்து மும்பைக்கு சென்றார். பின்னர் இளம்பெண், மிதுல் சதீஷ் கன்சாராவை மும்பையில் உள்ள ஓட்டலில் சந்தித்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் இளம்பெண்ணுடன், மிதுல் சதீஷ் கன்சாரா உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் காட்சிகளை மிதுல் சதீஷ் கன்சாரா தனது செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்தது.
அதன்பிறகு இளம்பெண் மும்பையில் இருந்து பெலகாவிக்கு வந்தார். இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு போன் செய்த மிதுல் சதீஷ் கன்சாரா ‘ஓட்டலில் 2 பேரும் சேர்ந்து இருக்கும் படங்கள் உள்ளன. இந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட உள்ளேன். இதை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும்‘ என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னிடம் பணம் இல்லை. தயவு செய்து படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் அதற்கு செவி சாய்க்காத மிதுல் சதீஷ் கன்சாரா, இளம்பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த இளம்பெண் சம்பவம் குறித்து பெலகாவியில் உள்ள சி.இ.என். சிறப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மிதுல் சதீஷ் கன்சாரா குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் முக்தாம்பூர் கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஏற்கனவே மிதுல் சதீஷ் கன்சாரா ஒரு பெண்ணை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் இண்டல்கா சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story