சேலம் கிச்சிப்பாளையத்தில் பரபரப்பு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


சேலம் கிச்சிப்பாளையத்தில் பரபரப்பு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 26 July 2019 4:30 AM IST (Updated: 26 July 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கிச்சிப்பாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாக்கரை திறக்க முடியாததால் ரூ.5 லட்சம் தப்பியது.

சேலம், 

சேலம் கிச்சிப்பாளையம் திருமுருகன் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை மர்ம ஆசாமி ஒருவன் அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்தான். பின்னர் அவன் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அப்போது மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்தது.

இதுபற்றி அங்குள்ள அதிகாரிகள் உடனடியாக சேலம் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, உதவி கமிஷனர் ஈஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பார்த்த போது, ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்க லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் அதற்குள் இருக்கும் உள்லாக்கரை திறக்க முடியாததால் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.5 லட்சம் தப்பியது.

இந்த கொள்ளை முயற்சி நடந்த இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அவன், ஒரு இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சியும் தெளிவாக தெரிந்தது. அதன் அடிப்படையில், இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி யார்?, எந்த ஊரை சேர்ந்தவன்? என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் சேலத்தில் உள்ள பல ஏ.டி.எம். மையங்களில் இரவு காவலாளிகள் கிடையாது என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க விரைவில் காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story