75 வயதை தாண்டிவிட்டதால் எடியூரப்பா ஓரங்கட்டப்படுகிறார்? முதல்-மந்திரி பதவி கிடைக்காது என தகவல்


75 வயதை தாண்டிவிட்டதால் எடியூரப்பா ஓரங்கட்டப்படுகிறார்? முதல்-மந்திரி பதவி கிடைக்காது என தகவல்
x
தினத்தந்தி 26 July 2019 4:35 AM IST (Updated: 26 July 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

75 வயதை தாண்டிவிட்டதால் எடியூரப்பா ஓரங்கட்டப்பட உள்ளதாகவும், அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, பா.ஜனதாவில் சக்தி வாய்ந்த தலைவர் ஆவார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவர் கடந்த 1943-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள பூகனகெரே கிராமத்தில் பிறந்தார். 1965-ம் ஆண்டு சமூக நலத்துறையில் கிளார்க் பணியை தொடங்கினார். பிறகு அந்த அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு, சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவுக்கு சென்றார். அங்குள்ள ஒரு அரிசி ஆலையில் பணிக்கு சேர்ந்தார்.

1967-ம் ஆண்டு மைத்ரிதேவி என்பவரை அவர் திருமணம் செய்தார். அவர் அந்த அரிசி ஆலை உரிமையாளரின் மகள் ஆவார். 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு எடியூரப்பாவின் மனைவி இறந்தார். 1972-ம் ஆண்டு சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராகவும், 1975-ம் ஆண்டு அதே டவுன் பஞ்சாயத்தின் தலைவராகவும் எடியூரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெருக்கடி காலத்தில் சிறையில் தள்ளப்பட்டார். 1985-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்ட பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 1988-ம் ஆண்டு கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். முதல் முறையாக அவர் 1983-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் கர்நாடக மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2004-ம் ஆண்டு தரம்சிங் முதல்-மந்திரியாக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவராக எடியூரப்பா பணியாற்றினார். அந்த ஆட்சியில் திடீரென பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. இதனால் தரம்சிங் முதல்-மந்திரி பதவியை இழந்தார். கூட்டணி ஆட்சியில் எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். ஒப்பந்தப்படி 20 மாதங்களுக்கு பிறகு எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ஏற்றார். ஆனால் 7 நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று 3 ஆண்டுகள் பணியாற்றினார். கனிம சுரங்க முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கட்சியில் சக்தி வாய்ந்த தலைவரான அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க பா.ஜனதா பெரும்பாடு பட்டது. அவரை அவ்வளவு எளிதாக பதவியை விட்டு நீக்க முடியவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு அவர் பதவி விலகினார். அதன் பிறகு கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய எடியூரப்பா, மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பினார்.

மீண்டும் வந்த பிறகும் கூட பா.ஜனதாவில் எடியூரப்பா என்ன சொல்கிறாரோ அது நடக்கும் நிலை இருக்கிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் எடியூரப்பாவின் பரிந்துரையை நிராகரித்துவிட்டு 2, 3 தொகுதிகளுக்கு கட்சி மேலிடம் நேரடியாக வேட்பாளர்களை அறிவித்தது. இது கட்சியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தினாலும், மோடி அலையை மனதில் வைத்து எடியூரப்பா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மை எண்ணிக்கைக்கு அருகில் வந்தது. ஆனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றது. அப்போது பெரும்பான்மை இல்லாதபோதும், அவசரகதியில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மூன்றே நாட்களில் அவர் பதவியை இழந்தார். இது பா.ஜனதாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி கவிழ்ந்தது. ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. அதனால் சட்டசபையின் பலம் முழுமையாக உள்ளது. ஏற்கனவே ஒருமுறை பா.ஜனதாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஆட்சியை இழந்தது. மீண்டும் அதே எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் 75 வயதை தாண்டிவிட்டதால் எடியூரப்பாவை முதல்-மந்திரியாக்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 75 வயதுக்கு மேல் கட்சி மற்றும் ஆட்சியில் பதவி வழங்குவது இல்லை என்ற கொள்கையை பா.ஜனதா பின்பற்றுகிறது. அதன்படி எடியூரப்பாவுக்கு வாய்ப்பு வழங்க பா.ஜனதா தயாராக இல்லை என்றே சொல்லப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு பதிலாக அவரது மகனுக்கு மந்திரி பதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிகிறது. மேலும் எடியூரப்பாவுக்கு கவர்னர் பதவி வழங்க பா.ஜனதா தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்-மந்திரி கனவில் மிதந்து வரும் எடியூரப்பா கட்சியின் இந்த முடிவை ஏற்பாரா? என்பது தெரியவில்லை.

பா.ஜனதாவில் எடியூரப்பா ஓரங்கட்டப்படுகிறார் என்ற தகவலை கேட்டு, அவரது ஆதரவாளர்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் எடியூரப்பாவின் அரசியல் எதிர்காலம் முற்று பெருமா? அல்லது தொடருமா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். அவர் சார்ந்துள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்த வேறு ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story