இடி, மின்னலுடன் பலத்த மழை அதிகபட்சமாக ஆரணியில் 79 மில்லி மீட்டர் பதிவு


இடி, மின்னலுடன் பலத்த மழை அதிகபட்சமாக ஆரணியில் 79 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 26 July 2019 10:45 PM GMT (Updated: 26 July 2019 5:43 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஆரணியில் 79 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இரவு 11 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்து காற்று வீசியது.

நள்ளிரவு 1 மணி வரை பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 79 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வெம்பாக்கம் - 76.2, கலசபாக்கம் - 66, போளூர் - 55.4, சேத்துப்பட்டு - 54.2, கீழ்பென்னாத்தூர் - 52.2, வந்தவாசி - 51, தண்டராம்பட்டு - 32.4, செய்யாறு - 31, திருவண்ணாமலை - 21.2, சாத்தனூர் அணை - 10.8, செங்கம் - 8.2.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஒவ்வொரு கோவில்களுக்கு அருகிலும், வனப்பகுதியிலும் குளங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் கிரிவலப்பாதையில் உள்ள ஒரு சில குளங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. அதுவும் குறைந்த அளவிலேயே மழைநீர் தேங்கி உள்ளது. குளங்களுக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் மழைநீர் குளங்களுக்கு வரவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் பல்வேறு குளங்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி வருகிறது. அதே போல் கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story