மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? வீடு வீடாக சென்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு


மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? வீடு வீடாக சென்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 27 July 2019 4:15 AM IST (Updated: 26 July 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். இந்த பணியை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

சென்னை,

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அனைத்து வீடுகளிலும், கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் ஏராளமான வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்பின்னர், இந்த திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.

இந்த ஆண்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதியை அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுத்தாதது முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரமாக அமல் படுத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் அனைத்து வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மாநகராட்சி மண்டல அலுவலர் தலைமையிலும், குடிநீர் வாரியத்தின் வட்டார பொறியாளர் தலைமையிலும் வார்டு வாரியாக ஒரு குழு வீதம் மொத்தம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக்குழு அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகள், கட்டிடங்களில் ஆய்வு பணியை தொடங்கி உள்ளது. சென்னை வால்மீகி நகரில் மாநகராட்சி மண்டல அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் முருகவேல், உதவி பொறியாளர் ஹேமமாலினி ஆகியோர் வீடு, வீடாக சென்று மழைநீர் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? என்று ஆய்வு செய்தனர்.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவை முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தாத வீடுகளில் உடனடியாக இந்த வசதியை விரைந்து ஏற்படுத்தவும், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு முறையாக பராமரிக்காமல் பயன்பாடற்ற நிலையில் இருந்தால் அதை சரி செய்யவும் இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story