சேலத்தில் போலீசார் வாகன சோதனை: கொள்ளையர்கள் 3 பேர் சிக்கினர்


சேலத்தில் போலீசார் வாகன சோதனை: கொள்ளையர்கள் 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 July 2019 3:45 AM IST (Updated: 27 July 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் கொள்ளையர்கள் 3 பேர் சிக்கினர்.

சேலம், 

சேலம் கிச்சிப்பாளையம் திருமுருகன் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் கடந்த 25-ந் தேதி அதிகாலை மர்ம ஆசாமி ஒருவன் உள்ளே புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். இதையடுத்து மாநகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கலெக்டர் அலுவலகம் அருகே வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தினர். அந்த காருக்குள் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல் கூறினர். மேலும் அவர்களிடம் காரின் ஆவணங்கள் கேட்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை.

இதையடுத்து போலீசார் அந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது காருக்குள் பூட்டை உடைக்க பயன்படுத்தப்படும் இரும்பு ராடு, திருப்புளி உள்ளிட்ட உபகரணங்கள் இருந்தன. இதனால் அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால் உடனடியாக குற்றப்பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் காருடன் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், பிரபல கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது. அந்த 3 பேர் மீது மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, ஈரோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.

எனவே இவர்கள் சேலத்தில் கைவரிசை காட்டுவதற்காக வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் ஏற்கனவே சேலத்தில் கொள்ளையடித்து சென்று உள்ளனரா? என்பது உள்ளிட்ட பல விவரங்களை அறிய அவர்கள் 3 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story