விழுப்புரத்தில், திருநங்கை கொலை வழக்கில் 6 பேர் கைது - மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரத்தில், திருநங்கை கொலை வழக்கில் 6 பேர் கைது - மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 July 2019 4:45 AM IST (Updated: 27 July 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 திருநங்கைகள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராஜவீதியை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் அன்பு (வயது 36). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறியதுடன் தனது பெயரை அபிராமி என்று மாற்றிக்கொண்டு விழுப்புரம் அய்யங்கோவில்பட்டு பகுதியில் உள்ள திருநங்கைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 17-ந்தேதி காலை விழுப்புரம் புறவழிச்சாலையில் அயினம்பாளையத்திற்கு செல்லும் வழியில் சாலையோரமாக அபிராமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், யாரோ சிலர் அபிராமியின் தலையில் பலமாக தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், அபிராமி கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் நடந்த தினத்திற்கு முன்பிருந்து சில வாரங்களாக அபிராமியுடன் யார், யாரெல்லாம் செல்போனில் பேசி வந்துள்ளனர் என்ற விவரத்தை ‘சைபர் கிரைம்’ போலீசாரின் உதவியுடன் சேகரித்தும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

இதில் கண்காணிப்பு கேமரா மூலம் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் திருநங்கைகளில் யாராவது சிலர், அபிராமியை கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதன் அடிப்படையில் அபிராமியுடன் தங்கியிருந்த திருநங்கைகள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதோடு அவர்கள் சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை யார், யாருடன் எல்லாம் செல்போனில் பேசி வந்துள்ளனர் என்ற விவரத்தையும் சேகரித்தனர்.

இதன் அடிப்படையில் அய்யங்கோவில்பட்டை சேர்ந்த புனிதா (28) என்ற திருநங்கை, தேனியில் உள்ள திருநங்கை ஒருவரிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளதை போலீசார் கண்டறிந்தனர். உடனே தேனியில் உள்ள அந்த திருநங்கையை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர். அப்போது புனிதாவிற்கும், அபிராமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதும், இதனால் அபிராமியை என்ன செய்யலாம் என்று புனிதா தன்னிடம் ஆலோசனை கேட்டதாகவும் தேனி திருநங்கை போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனால் போலீசாரின் ஒட்டுமொத்த சந்தேகமும் புனிதா மீது திரும்பியது. அதன்படி புனிதாவை பிடித்து போலீசார் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினர்.

விசாரணையில், புனிதா தனது தம்பியான அரியலூர் மாவட்டம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த வீரபாண்டியன் (22), முகையூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த இருதயமகிமை சகாயம் (27), சக திருநங்கைகளான முகையூர் அந்தோணியார் தெருவை சேர்ந்த கயல்விழி (29), சேலம் அம்மாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மதுமதி (28) மற்றும் விழுப்புரம் விநாயகர் நகரை சேர்ந்த இம்தியாஸ் (24), விழுப்புரம் அருகே ஆயந்தூரை சேர்ந்த ஆமோஸ் (19) ஆகியோரின் உதவியுடன் அபிராமியை தலையில் இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திருநங்கைகள் புனிதா, கயல்விழி, மதுமதி மற்றும் வீரபாண்டியன், இருதயமகிமை சகாயம், இம்தியாஸ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய இரும்புக்கம்பிகள், உருட்டுக்கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆமோஸ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story