வேப்பந்தட்டை தாலுகாவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளை புனரமைக்கும் பணிகள் கலெக்டர் சாந்தா ஆய்வு


வேப்பந்தட்டை தாலுகாவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளை புனரமைக்கும் பணிகள் கலெக்டர் சாந்தா ஆய்வு
x
தினத்தந்தி 27 July 2019 4:30 AM IST (Updated: 27 July 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை தாலுகாவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளை புனரமைக்கும் பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத் தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர் ஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாரிகளை தூர் வாருதல், வரத்து வாய்க்காலில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல இருபக்கமும் கரை அமைத்து நீரை ஏரிக்கு கொண்டு வர தடுப்புச்சுவர் அமைத்து வாய்க்காலை சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வி.களத்தூர், கை.களத்தூர் மற்றும் வெண்பாவூர் ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி புனரமைக்கும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் உள்ள ஏரிகளில், 14 ஏரிகளை குடிமராமத்து திட்டத்தில் நடப்பாண்டு 2019-20-ல் ரூ.3 கோடியே 48 லட்சத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்தந்த ஏரியின் மூலம் பாசனம் பெறும் பாசனதாரர்களின் குழு அமைத்து அவர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வி.களத்தூர் ஏரி ரூ.22 லட்சம் மதிப்பீட்டிலும், கை.களத்தூர் ஏரி ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், வெண்பாவூர் ஏரி ரூ.21 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வரத்து வாரி தூர் வாரி வரத்து வாய்க்காலில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல இருபக்கமும் கரை அமைத்து வாய்க்காலை சரி செய்து நீரை ஏரிக்கு கொண்டு வரவும் மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தும், கரையை பலப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் நிறைவு பெற்றவுடன் அதிகளவிலான மழைநீரானது தேக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்ந்து எதிர் வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

ஆய்வின்போது செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர் ஆதாரத்துறை அரியலூர்) தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் (மருதையாறு உபகோட்டம்) பிரபாகரன், உதவி பொறியாளர் நல்லுசாமி, பாசனதாரர் சங்க தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story