தொழில் போட்டி தகராறில் நிதி நிறுவன அதிபருக்கு அரிவாள் வெட்டு இரணியல் அருகே பரபரப்பு


தொழில் போட்டி தகராறில் நிதி நிறுவன அதிபருக்கு அரிவாள் வெட்டு இரணியல் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 27 July 2019 3:47 AM IST (Updated: 27 July 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே தொழில் போட்டி தகராறில் நிதி நிறுவன அதிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இரணியல்,

இரணியல் அருகே பெரியாபள்ளி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவர் அப்பகுதியில் இறைவா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிதி நிறுவனத்தில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஞான அருள் சேவியர் (45) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

பின்னர் மோகனிடம் இருந்து பிரிந்த ஞான அருள்சேவியர் வேறொரு நிறுவனத்தை நடத்தினார். இதனால் மோகனுக்கும், ஞான அருள் சேவியருக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாங்குழி என்ற பகுதியில் மோகன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ஞான அருள் சேவியர் மோகனை தகாத வார்த்தைகளால் பேசி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மோகன் படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து மோகனின் மனைவி மேரி ஜெலஸ்டின் சுதா (42) இரணியல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஞான அருள்சேவியர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ஞான அருள்சேவியர் இரணியல் போலீசில் அளித்த புகாரில், மாங்குழி பகுதியில் காரில் சென்ற போது என்னுடைய காரை தடுத்து நிறுத்திய மோகன், ஆட்டோ டிரைவர் ரவியுடன் சேர்ந்து என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

அதே சமயத்தில் மோகன், ஞான அருள்சேவியர் ஆகிய இருவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தொழில் போட்டி தகராறில் நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story