வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூதலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கழுமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ரமேசிடம் கிராமத்தில் குளங்கள் குறித்த விவரங்களை வட்டார வளர்ச்சி அதிகாரி ஒருவர் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்ட உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதைகண்டித்தும் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பூதலூரில் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ராஜேஸ்கண்ணன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று 2-வது நாளாக பூதலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தில் பூதலூர், தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, மற்றும் பல தாலுகாக்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் விஜயபாஸ்கர், பூதலூர் வட்ட தலைவர் விமலா, வட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருவையாறு வட்டார வளர்ச்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் பூதலூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் அவரது புகாரை எழுத்துபூர்வமாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பூதலூர் தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டார்.
Related Tags :
Next Story