திருப்பூர் போயம்பாளையத்தில் வெங்காய மண்டியில் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு


திருப்பூர் போயம்பாளையத்தில் வெங்காய மண்டியில் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 27 July 2019 3:55 AM IST (Updated: 27 July 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் போயம்பாளையத்தில் வெங்காய மண்டியில் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அந்த ஆசாமிகள் அடுத்தடுத்த கடைகளில் கைவரிசை காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் போயம்பாளையத்தில் வெங்காய மண்டியில் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிய சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு சீதகாதி வீதியை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (வயது 36). இவர் பெருமாநல்லூர்-திருப்பூர் ரோட்டில் போயம்பாளையம் 4 ரோடு சந்திப்பு அருகே பூண்டு, வெங்காய மண்டி வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக கடையில் வியாபாரம் ஆகும் பணத்தை முகமது ரியாஷ் தினமும் வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம்.

ஆனால் திருப்பதி என்பவருக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததால் நேற்று முன்தினம் இரவு ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை வீட்டிற்கு எடுத்து செல்லாமல் கடையில் இருந்த மேஜையில் வைத்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த போது கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மேஜையில் வைத்திருந்த பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் இரவில் கடையின் பின்பக்க இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் மேஜையில் இருந்த பணத்தில் ரூ.11 ஆயிரத்தை மட்டும் விட்டு விட்டு, ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் பணம் திருட்டு போன கடையின் அருகிலேயே அடுத்தடுத்து உள்ள மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி, மனோகரன் என்பவருக்கு சொந்தமான பி.வி.சி. கதவு கடை மற்றும் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான மருந்தகம் ஆகிய 3 கடைகளிலும் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் திருட முயற்சி செய்தனர். ஆனால் மெடிக்கல் கடையின் 2 பூட்டை உடைத்தவர்கள் நடுப்பகுதி பூட்டை உடைக்க முடியாததால் திருடும் முயற்சியை கைவிட்டனர். இதேபோல் பேக்கரி மற்றும் கதவு கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கு பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story