சட்டசபையில் 29-ந் தேதி பெரும்பான்மையை நிரூபிப்பேன் - முதல் மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


சட்டசபையில் 29-ந் தேதி பெரும்பான்மையை நிரூபிப்பேன் - முதல் மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 27 July 2019 5:30 AM IST (Updated: 27 July 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் 29-ந் தேதி பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும், கர்நாடக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா நேற்று மாலை பதவி ஏற்றார். பதவி ஏற்றதும் அவர் நேராக விதான சவுதாவுக்கு வந்தார். அங்கு 3-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கத்தில் மந்திரிசபை கூட்டம் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மந்திரிசபை கூட்டம் நடத்தினேன். மத்திய அரசு ‘கிருஷி சம்மான்‘ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. அத்துடன் கர்நாடக அரசு ரூ.4,000 உதவித்தொகையை ரூ.2 ஆயிரம் வீதம் 2 தவணையாக வழங்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆகமொத்தம் கர்நாடக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கிடைக்கும்.

நெசவாளர்களின் ரூ.100 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். வருகிற 29-ந் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். இதற்காக 29, 30-ந்தேதிகளில் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படும். எக்காரணம் கொண்டும் பழிவாங்கும் அரசியல் செய்யமாட்டேன்.

அடுத்த 5 மாதங்களில் சிறப்பாக செயல்படுவேன். கடந்த 14 மாதங்களில் நடைபெற்ற பணிகளை 5 மாதத்தில் நான் செய்து முடிப்பேன். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கஷ்டங்களை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பா பதவி ஏற்ற முதல் நாளிலேயே விவசாயிகளுக்கு உதவித்தொகை மற்றும் நெசவாளர்களின் கடன் தள்ளுபடி ஆகிய 2 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தான் ஒரு விவசாயியின் மகன் என்பதை உணர்த்தும் வகையில் பதவி ஏற்பின்போது, எடியூரப்பா தனது தோளில் பச்சை சால்வை அணிந்திருந்தார்.

Next Story