தகுதி நீக்கத்தை கண்டு பயப்பட போவதில்லை - அதிருப்தி எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் சொல்கிறார்
தகுதி நீக்கத்தை கண்டு பயப்பட போவதில்லை என்றும், ராஜினாமாவை திரும்ப வாங்கமாட்டோம் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாலும், கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெற்றதாலும் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, ஆர்.சங்கர் ஆகிய 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் 3 பேரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதித்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மும்பை ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.வான எச்.விஸ்வநாத் கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, ஆர்.சங்கரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி மும்பையில் தங்கியுள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் வந்தது. அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 3 பேரும் கோர்ட்டுக்கு செல்வார்கள். கோர்ட்டில் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களது ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
எங்களை மிரட்டுவதற்காக 3 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக நினைக்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். ராஜினாமாவை திரும்ப வாங்கமாட்டோம். தகுதி நீக்கத்தை கண்டும் பயப்பட போவதில்லை. எங்களது ராஜினாமாவை விரைவில் சபாநாயகர் அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மும்பையில் இருந்து இன்னும் 3 நாட்களில் பெங்களூருவுக்கு திரும்ப முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.
Related Tags :
Next Story