பெரும்பான்மை பலம் இல்லாத பா.ஜனதா எப்படி ஆட்சி அமைக்க முடியும்? சித்தராமையா கேள்வி


பெரும்பான்மை பலம் இல்லாத பா.ஜனதா எப்படி ஆட்சி அமைக்க முடியும்? சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 27 July 2019 5:00 AM IST (Updated: 27 July 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பான்மை பலம் இல்லாத பா.ஜனதா எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்பார் என்று நேற்று காலை அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா மற்றும் எடியூரப்பாவுக்கு அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மாண்புகள் தெரிய வேண்டும். குறைந்தபட்ச அறிவும் அவர் களுக்கு இருக்க வேண்டும். கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பா.ஜனதாவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை ஒருவரை சேர்த்தால் 106 பேர், காங்கிரசுக்கு 79 பேர், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 37 பேர், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளார்.

இவற்றில் காங்கிரசை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஸ்ரீமந்த்பட்டீலுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 76 ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலையில் காங்கிரசை சேர்ந்த 76 எம்.எல்.ஏ.க்கள், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 37 பேர் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

மேலும் சபாநாயகர், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவையும் சேர்த்தால் கூட்டணியின் பலம் 115 ஆக உள்ளது. ஆனால் பா.ஜனதாவுக்கு 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு சட்டசபையின் பலம் 221 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மட்டும் வைத்துள்ள நிலையில் பெரும்பான்மை பலம் இல்லாத பா.ஜனதா எப்படி ஆட்சி அமைக்க முடியும்?.

இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story