2 சிறுமிகள் பலாத்காரம்: தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா(வயது 52). கூலித்தொழிலாளி. இவர் 10 வயது சிறுமி மற்றும் 9 வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலமுறை இதுபோல அந்த சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் அந்த குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவத்தை 2 சிறுமிகளும் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் முத்தையா மீது சிலைமான் போலீசில் புகார் செய்தனர்.
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் முத்தையா மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச்சட்டமும் பாய்ந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 17 மாதங்களாக மதுரை சிறையிலேயே தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஆர்.தங்கம் ஆஜரானார்
விசாரணை முடிவில், முத்தையா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புளோரா நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து முத்தையாவை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.