மணல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை


மணல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 27 July 2019 5:00 AM IST (Updated: 27 July 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை தாலுகா அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் விவசாயிகள் சங்கமும் இணைந்து நேற்று சவுடு மணல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரை,

மானாமதுரை அருகே வேதியரேந்தல் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில் சவடு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் 6 மாத காலத்திற்கு தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அனுமதி அளித்துள்ள பட்டா நிலத்தில் சவடு மணல் கிடையாது. வைகை ஆற்றிற்கும், மேலநெட்டூர் கால்வாய்க்கும் இடையே ஆற்று மணல் உள்ளது. அதனை அள்ளவே திட்டமிட்டுள்ளனர். மணல் அள்ளுவதற்கு கால்வாய் கரையை உடைத்து பாதையும் அமைத்து வருகின்றனர். ஆற்று மணல் அள்ளுவதால் வேதியரேந்தல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே சவடு மணல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று வேதியரேந்தல் கிராம மக்கள், விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மணல் குவாரி அனுமதி ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.

வருவாய்த்துறையினர் கூறும்போது, சவடு மணல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கால்வாய் கரையை உடைத்து பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவாரி காலம் முடிவடைந்த உடன் மீண்டும் கரை அமைத்து தருவதாக தெரிவித்துள்ளனர் என்றனர்.

ஆனால் அனுமதிக்கப்பட்ட குவாரியில் சவடு மணல் என்பது இல்லவே இல்லை. ஆற்று மணல் தான் அள்ளப்பட உள்ளதாக கிராமமக்கள் குற்றம் சாட்டினர். சவடு மணல் குவாரிக்கான அனுமதி ரத்து செய்யப்படும் வரை போராட்டம் நடத்த போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் அகர்பான் கூறும்போது, முறையாக உயர் அதிகாரிகள் சவடு மணல் அள்ள அனுமதி கொடுத்து உள்ளனர். தற்போது பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். இந்த விஷயத்தை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சுமுக தீர்வு காணப்படும் என்றனர்.

Next Story