மும்பையில் முப்படை சார்பில் கார்கில் வெற்றி தின கொண்டாட்டம்
மும்பையில் முப்படை சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. கொலபாவில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மரியாதை செலுத்தினார்.
மும்பை,
கார்கில் போர் வெற்றி தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மும்பையில் முப்படையினர் சார்பில் நடந்த விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்-மந்திரி மற்றும் முப்படை அதிகாரிகளும் கொலபாவில் கடற்படை வளாகத்தில் உள்ள போரில் வீரமரணம் அடைந்த வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி மும்பை கடற்படை டக்யார்டில் ஐ.என்.எஸ். சென்னை, ஐ.என்.எஸ். மும்பை ஆகிய போர் கப்பல்களை பள்ளி மாணவர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களுக்கு கார்கில் போர் வெற்றி பற்றியும், போர் கப்பல் பற்றியும் கடற்படை வீரர்கள் விளக்கி கூறினர். மும்பையை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் 2 போர் கப்பல்களையும் பார்வையிட்டனர்.
விமான படை சார்பில் மும்பை அருகே உள்ள கன்ஹேரி மலையில் பள்ளி மாணவர்களுக்கான மாரத்தான் ஓட்டம் நடந்தது. மேலும் பள்ளி மாணவர்கள் அங்குள்ள விமானப்படை தளத்தை பார்வையிட்டனர். அப்போது கார்கில் போரில் விமானப்படையின் பங்கு குறித்து விமானப்படை அதிகாரிகள் மாணவர்களிடம் விளக்கி கூறினர்.
இதேபோல ராணுவம் சார்பில் தென்மும்பையில் உள்ள கூப்ரேஜ் மைதானத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் இந்தி நடிகர்கள் இடையேயான கால்பந்து போட்டி நடந்தது.
இதில் முதல்-மந்திரி தேவந்திர பட்னாவிஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ராணுவ, கடற்படை வீரர்கள் அவர்களின் குடும்பத்தினர், தேசிய மாணவர் படையினர், பொது மக்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் இந்த கால்பந்து போட்டியை பார்த்து ரசித்தனர். இதேபோல அங்கு ராணுவத்தினர் சார்பில் இசை நிகழ்ச்சி மற்றும் ஆயுத கண்காட்சியும் நடந்தது.
Related Tags :
Next Story