ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரி, ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரி ஊட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரி தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டந்தோறும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கட்டாரி, மகளிர் அணி காஞ்சனா, நகர செயலாளர் தம்பி இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆணவ படுகொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சகாதேவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சில இடங்களில் ஆணவ கொலைகள் நடைபெற்று உள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டித்து வருகின்றது. இருப்பினும் இப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படுவது இல்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஆணவ படுகொலைகளை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் தனி சட்டம் கொண்டு வர வேண்டும். இதை வலியுறுத்தி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மண்ணரசன், ராஜேந்திரபிரபு, துயில்மேகம், ரமணா உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story