கட்-ஆப் மார்க் விவகாரம், ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் - கு.ராமகிருட்டிணன் உள்பட 70 பேர் கைது


கட்-ஆப் மார்க் விவகாரம், ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் - கு.ராமகிருட்டிணன் உள்பட 70 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2019 4:15 AM IST (Updated: 27 July 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

கட்-ஆப் மார்க் விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் சமீபத்தில் நடத்திய தேர்வில் உயர் சாதி வகுப்பினருக்கு தகுதி கட்-ஆப் மார்க் 28.5 என்று நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பிரதான கிளை முன்பு நேற்றுக்காலை முற்றுகை போராட்டம் நடந்தது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கிபேசினார்.

இதில் ஜீவானந்தம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), சுசி கலையரசன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி ), ரவிக்குமார் (ஆதித்தமிழர் பேரவை), வெண்மணி (திராவிட தமிழர் கட்சி), வள்ளுவர்ராசன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), உசேன் (எஸ்.டி.பி.ஐ.), சுந்தரமூர்த்தி (மே 17), நவீன் (தமிழர் விடியல் கட்சி), வேல்முருகன் (சி.பி.ஐ.எம்.எல்.) உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் திடீரென்று வங்கிக்குள் நுழைய முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:-

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர் போதுமான அளவில் வரவில்லை என்பதால் அவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது இடஒதுக்கீடு ஏன் அளிக்க வேண்டும். இதே போல தாழ்த்தப்பட்ட பிரிவின ருக்கு ஒதுக்கப்பட்ட காலி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. அப்படியிருக்கும் போது தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கட் ஆப் மதிப்பெண்ணை குறைக்காமல் இருப்பது ஏன்?.

ஸ்டேட் வங்கியை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் இதுபோன்ற ஒரு நிலையை மத்திய பா.ஜனதா அரசு எடுக்கும். இதனால் சமூக நீதி குழி தோண்டி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் எண்ணை உயர்த்த வேண்டும். அது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் தீர்ப்பு வரும் வரை உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவை ஸ்டேட் வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கு.ராமகிருட்டிணன் உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்த 70 பேரை போலீசார் கைது செய்து அவர்களை வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத் தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story