சாணார்பட்டி அருகே, சாலை அமைப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் மறியல் - கலெக்டர் பேச்சுவார்த்தை
சாணார்பட்டி அருகே சாலை அமைப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் கலெக்டர் விஜயலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோபால்பட்டி,
சாணார்பட்டி அருகே எமக்கலாபுரம் பிரிவு முதல் கருப்புடையான்பட்டி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார்சாலை அகலப்படுத்தும் பணி, புதிய பாலங்கள் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் ரூ.1 கோடியே 84 லட்சம் செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கருப்புடையான்பட்டியில் சாலை அமைப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி திண்டுக்கல்-நத்தம் சாலையில் எமக்கலாபுரம் பிரிவு அருகே பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கருப்புடையான்பட்டி ஊருக்குள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை அமைப்பதால், பஸ்கள் வந்து செல்ல முடியாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். புதிதாக கட்டப்படும் பாலமும் முறையாக கட்டப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார். தகவலறிந்த சாணார்பட்டி போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக நத்தத்துக்கு சென்ற மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாலை அமைக்கும் பணி தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story