தி.மு.க.வுக்கு மக்கள் கொடுத்த வெற்றியை அ.தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க.வுக்கு மக்கள் கொடுத்த வெற்றியை அ.தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 27 July 2019 11:00 PM GMT (Updated: 27 July 2019 4:53 PM GMT)

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் கொடுத்த வெற்றியை அ.தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. தி.மு.க. சார்பில் பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் லத்தேரி பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர்ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்க உங்களிடம் வந்துள்ளேன். தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க கூடியவர்கள் நாங்கள் அல்ல. உங்களுடன் எப்போதும் இருப்பவர்கள்.

வேலூர் தேர்தல் நியாயமாக ஏப்ரல் மாதம் நடந்திருக்க வேண்டியது. திட்டமிட்ட சதி காரணமாக தேர்தலை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேர்தல் நடந்திருந்தால் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றிருப்பார். குறிப்பாக தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும். தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்த அரசியல் லாபத்துக்காக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து வேலூர் தேர்தலை ரத்து செய்ய சதி செய்தன. இப்படிப்பட்ட சூழலில் தான் வேலூர் தேர்தல் தற்போது நடக்க உள்ளது.

கதிர்ஆனந்த் தேர்தலில் வெற்றி பெற்றால் கூடுதலாக தி.மு.க. எம்.பி. நாடாளுமன்றத்துக்கு சென்று மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பார். ஆனால் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் ஏற்கனவே உள்ள அ.தி.மு.க.வினரை போன்று அடிமையாக கூனி குறுகி தான் அமர வேண்டி இருக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது. தேர்தல் தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்தியாவிலேயே தி.மு.க.வினர் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆம்பூர், குடியாத்தம் உள்பட 22 சட்டமன்றங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க.விற்கு 9 தொகுதிகளில் தான் வெற்றி கிடைத்தது. திருவாரூர் மற்றும் அ.தி.மு.க.வினர் வசமிருந்த 12 தொகுதிகளில் தி.மு.க.வினருக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் அ.தி.மு.க.வினர் மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கும், மாநிலத்தில் அ.தி.மு.க.வுக்கும் ஆதரவு அளித்துள்ளனர் என்று கூறி வருகின்றனர். 13 தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதில் இருந்தே தமிழகத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என தெரிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் விரைவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். தி.மு.க.வினர் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் என்று முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கூறுகிறார்கள். நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் கொடுத்த வெற்றியை அ.தி.மு.க.வினர் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்கள். தி.மு.க.வினர் மக்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்துக்கு சென்ற நமது எம்.பி.க்கள் இந்தி திணிப்பு, நீட் தேர்வு, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். தேர்தலில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கே.வி.குப்பம், குடியாத்தம் பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், மகளிர் கல்லூரி கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், வேட்பாளர் கதிர்ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து செஞ்சி, காளாம்பட்டு ஆகிய பகுதிகளில் மு.க.ஸ்டாலின் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

Next Story