பழனி பஸ் நிலையத்தில் வாகன நிறுத்தமாக மாறிய நடைமேடை


பழனி பஸ் நிலையத்தில் வாகன நிறுத்தமாக மாறிய நடைமேடை
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 27 July 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

பழனி பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை பகுதி வாகனங்கள் நிறுத்தப்படும் இடமாக மாறியுள்ளது.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பஸ்களிலேயே வருகின்றனர். பயணிகளின் வருகை, பயன்பாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பழனி பஸ்நிலையத்தின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வாகன நிறுத்தமாக மாறி வருகிறது.

அதிலும் பஸ்நிலையத்தில் மக்கள் நடந்து செல்லும் பாதை, பஸ்கள் நிறுத்தும் இடம் போன்றவற்றில் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், உரிய இடத்தில் பஸ்களை நிறுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பஸ்நிலையத்தின் அருகிலேயே வாகன நிறுத்தம் வசதி உள்ளது. எனினும் பலர் தங்களின் மோட்டார் சைக்கிள்களை பஸ்நிலையத்தில் பஸ்கள் நிற்கும் பகுதியில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இவை ஒருபுறம் என்றால், பல சம்பவங்கள் பக்தர்கள், பயணிகளை முகம் சுழிக்க வைக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதாவது பழனி பஸ் நிலையத்தை அழகு படுத்தும் வகையில் மையப்பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவை சுற்றி சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் அங்கு சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு சிறுநீர் கழிக்க கூடாது என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. ஆனாலும் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

குறிப்பாக சில டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை நிறுத்திவிட்டு, அதன் மறைவு பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவது அவலமான ஒன்றாகும். எனவே பஸ் நிலையத்தின் நடைமேடை பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்படுதல், பூங்கா சுற்றுப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனி பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story