திருப்பூர், காங்கேயம் பகுதியில் ரூ.16 லட்சத்தில் குடிமராமத்து பணிகள்; கலெக்டர் ஆய்வு செய்தார்


திருப்பூர், காங்கேயம் பகுதியில் ரூ.16 லட்சத்தில் குடிமராமத்து பணிகள்; கலெக்டர் ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 28 July 2019 4:15 AM IST (Updated: 28 July 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், காங்கேயம் பகுதியில் ரூ.16 லட்சத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

திருப்பூர்,

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பாசனதாரர்கள் தொகுப்பு மூலமாக பணிகளை செயல்படுத்த அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தில் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், முட்புதர்களை அகற்றுதல், கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டிடங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரையை பலப்படுத்துதல், குளங்களின் கரையை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் ஆழியாறு வடிநில கோட்டம், திருமூர்த்தி கோட்டம், பவானி வடிநில கோட்டம், அமராவதி வடிநில கோட்டம் மூலமாக நடப்பாண்டில் 134 பணிகள் ரூ.15 கோடிக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தில் குடிமராமத்து பணிகள் மூலமாக மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், காங்கேயம், திருப்பூர் தெற்கு ஆகிய தாலுகாக்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 663 ஹெக்டேர் பாசன நிலங்கள் பயன்பெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.

திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தில் பெருந்தொழுவு கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.11½ லட்சம் மதிப்பில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் பெருந்தொழுவு கிளை வாய்க்கால் 8 கிலோ மீட்டர் தூரம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. காட்டுப்பாளையம், விஜயாபுரம், மணியம்பாளையம், ஆண்டிப்பாளையம், பருவக்கரைபாளையம் பகிர்மான கால்வாய் மற்றும் அதன் துணை பகிர்மான கால்வாயில் உள்ள மதகுகள், குறுக்கு கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று ஆய்வு செய்தார்.

மேலும் காங்கேயம் தாலுகா சிவன்மலை சிக்கரசம்பாளையத்தில் சிவன்மலை கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் ரூ.4½ லட்சத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் சிவன்மலை பகிர்மான கால்வாய் மற்றும் அதன் துணை பகிர்மான கால்வாய்களில் மதகுகள், குறுக்கு கட்டுமானங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த பணிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் ஆழியாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி(பொங்கலூர்), உதவி பொறியாளர் சத்திக்குமார், திருப்பூர் தெற்கு தாசில்தார் மகேஸ்வரன், காங்கேயம் தாசில்தார் விவேகானந்தன் மற்றும் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story